Online matrimonial: சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத்தேடும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்கள் உங்கள் வங்கி கணக்குகளை காலி செய்யவும், போன்களை ஹேக் செய்யவும், தனிப்பட்ட தரவுகளை திருடவும் புதிய வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். OTP போன்ற பாரம்பரிய பாதுகாப்பு முறைகளை கூட அவர்கள் எளிதாக முறியடிக்கின்றனர். இதேபோல், தற்போது, சமீபத்தில் திருமண வரன்தேடும் தளங்களைப் பயன்படுத்தி, போலி முதலீட்டு தளங்களில் (www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www,cityindexlimited.com) பெருந்தொகையை முதலீடு செய்யவைப்பதில் ஒரு புதிய மோசடி உருவாகிவருகிறது. இந்த தளங்கள் நம்பகமானவை போல தோற்றமளிக்கும்.
இதுதொடர்பாக, தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன. எனவே, பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும். அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்ததால் எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒருபோதும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் வருமானம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
அந்நியர்களுடன் வாட்ஸ்-அப் அல்லது பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிர வேண்டாம். நம்பகமான முதலீடுகள் முறையான சேனல்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் பதிவு செய்யவும்.