காலநிலை மாற்றம் காரணமாக `மெட்ராஸ் ஐ’ தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தை காட்டிலும் 20% அதிகரித்துள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ்-ஐ அல்லது வெண்படல அழற்சி பிரச்சனை வந்தால் கண்கள் சிவந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கும். இதனால் கண்கள் சிவந்து இரத்தக் கலரில் காணப்படும். மேலும் கண்களில் அரிப்பு, வலி போன்றவையும் இருக்கும். இதனால், கண்களை கசக்க முடியாது. மேலும், நமைச்சலும் அரிப்பும் கண்களில் அழுக்கும் இருந்துகொண்டே இருக்கும். கான்ஜூன்க்டிவிடிஸ் என்பது ஒரு கண் தொற்றுநோயாகும்.
இது தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ என்றும் பிற மாநிலங்களில் பிங்க் ஐ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபருக்கு இந்த பிரச்சனை ஏற்படும்போது கண்கள் சிவந்து வீக்கமடையும். இதில் இருந்து வெளிப்படும் தண்ணீர் மூலம் இது பிறருக்கும் பரவ வாய்ப்புள்ளாது. ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக கண்ணின் ஒரு பகுதியான கான்ஜூன்டிவா வீக்கமடையும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
முதலில் ஒரு கண்ணில் இந்த பிரச்சனை தோன்றி, மற்றொரு கண்ணுக்கும் பரவலாம். இந்த மெட்ராஸ் ஐ பிரச்சனை பெரும்பாலும் சிறுவர்களுக்கு ஏற்படும். மேலும், இளம் வயதினருக்கும், பெரியவர்களுக்கும் அவ்வப்போது பாதிப்பை தரும். இதுகுறித்து கண் மருத்துவர்கள் கூறுகையில், ”மெட்ராஸ் ஐ என்பது எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்த் தொற்றுதான். ஆனால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருந்தால், பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து இருத்தல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். பொதுவாக ஒரு கண்ணில் தொற்று ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த சில வாரங்களாக மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில், அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.