கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் தொடர் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், அறநெறி பாடத்தின் (moral education) ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, செப்டம்பர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எம்.கே.பிரனேஷ், ”எதிர்ப்புகள் இல்லை என்றபோதிலும், பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த மாநில அரசு தயங்குகிறதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், ”மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டிசம்பர் முதல் பகவத் கீதை, அறநெறிக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படும்.
இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பகவத் கீதை அறநெறிக் கல்வி பாடத்தின் கீழ் கற்பிக்கப்படும். இது தொடர்பாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரைவில் முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், பகவத் கீதையை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது, கொரோனா தொற்றுநோயை விட ஆபத்தானது என, மூத்த காங்கிரஸ் தலைவரான தன்வீர் சைத் (Tanveer Sait) கூறியுள்ளார். இதேபோல், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் கர்நாடக சட்டப்பேரவையில் முன்வைத்தனர்.