தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவில் மழையின் அளவு வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் உபரிநீரானது, முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக காவிரி ஆற்றின் கரையோரம் இருக்கும் சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, ஊராட்சி கோட்டை,காடப்பநல்லூர், பவானி போன்ற கிராமங்களில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பவானி நகரத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் பசுவேஸ்வரர் வீதி மற்றும் பூக்கடை அருகே இருக்கும் பாலக்கரை மற்றும் பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் காவேரி நகர், காவேரி வீதி ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பவானி நகரில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களை அந்த பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.