மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – 2022 விழாவில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகளை வழங்கினார். இதையடுத்து, பேசிய அவர், ”அனைத்து நாட்களுமே மாற்றுத் திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம். அனைவரையும் திறமையாளர்களாக மாற்ற வேண்டும் என அரசு உறுதி எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என அரசு செயல்பட்டு வருகிறது. ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் துன்பம் அடைய கூடாது” என்று தெரிவித்தார்.
உடல் குறைபாடாக இருக்கலாம், ஆனால் உள்ளக் குறைபாடு இல்லை, அறிவு குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து போற்ற வேண்டும். சமூகத்தில் மற்ற தரப்பினர் அடையும் அனைத்து வசதிகளையும், மாற்றுத்திறனாளிகளும் பெற வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை உருவாக்க உள்ளோம். வரும் ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்தார்.