மே 8ஆம் தேதியே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு 8.21 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். 4,800 பறக்கும் படைகளுடன் 3,316 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதற்கிடையே, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மே 8ஆம் தேதியே பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.