அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு. அதிமுக மதுசூதனனின் உறவினர் இவர். ஒருகாலத்தில் அதிமுக-வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர். பொது இடங்களில் ஜெயலலிதா இவரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக-வில் இணைந்தார் தற்போதைய திமுக அமைச்சர் சேகர் பாபு.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் கட்சிப் பணியாக இருந்தாலும் சரி ஆட்சிப்பணியாக இருந்தாலும், பம்பரமாக சுழன்று காரியமாற்றக் கூடியவர் அமைச்சர் சேகர் பாபு. கட்சிக்காரர்களுக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக இவர் செய்வதும் இவருக்கு இருக்கும் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. தனது அலைபேசியில் எத்தனை மிஸ்டு கால்கள் இருந்தாலும் அதனை திரும்ப அழைத்து விவரம் கேட்கக்கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படி அன்பாலும், பாசத்தாலும் வடசென்னையில் பகுதியில் தனக்கென பெரிய கூட்டத்தையே வைத்திருக்கிறார் இவர்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் சென்னை ஓட்டேரியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தேவராஜுக்கு உடல்நிலை சரியில்லை, குறிப்பாக வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானதாகவும், இதனால் கடந்த சில நாட்களாக வீட்டில் சோர்வாக இருந்தாதாகவும், இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக கட்சி தொண்டர்களும் மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.