மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100 பேர் பரிதாமாக உயிரிழந்தனர்.
மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு முடிவு கட்டப்படும் என மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. மியான்மரில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. இதையடுத்து, ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மியான்மர் ராணுவம் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றியது.
இதனையடுத்து ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மியான்மர் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் வீட்டுச் சிறை ஆகியவற்றை உலக நாடுகள் கண்டித்தன. ஆனாலும், ராணுவம் இது தொடர்பாக எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் மியான்மரில் பொதுமக்கள் மீது இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மியான்மரில் நடைபெற்ற ராணுவ விமான தாக்குதலில் சுமார் 30 குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்திற்கு எதிராக எதிர்ப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் ஒரு போர் குற்றம் என மீட்பு குழுவில் இடம்பெற்ற உள்ளூர்வாசி குற்றம் சாட்டியுள்ளார். ரோஹிங்கியா மக்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு நடைபெற்றுள்ள பெரிய அளவிலான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.