நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் தற்போது விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அப்செட்டில் உள்ள புஸ்ஸி ஆனந்த், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேலை செய்ய வேண்டும், மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ அதேபோல் தமிழக வெற்றி கழகமும் பொதுமக்களின் சேவையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகி, மாவட்ட செயலாளர்களும் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்குள் தலைவர் விஜய் இருக்கிறார். எல்லா தொகுதியிலும் விஜய் போட்டியிடுவதாக நினைத்து வேலை செய்யுங்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கட்சி, விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும்போது, தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் திமுகவில் இணைந்துள்ளார்.
இதனால் அப்செட்டில் உள்ள தலைமை, தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது. இவர் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுகவில் இணைந்துள்ள பில்லா, கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகனை திமுகவில் இருந்து அப்போதைய பொதுச்செயலாளர் அன்பழகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். குடும்ப விவகாரத்திலும் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறக்க தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தம்பி சிம்சன் தொடையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரத்தம் அதிகமாக வெளியேறியது. நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சிம்சன் உயிரிழந்தார். தம்பியை துப்பாக்கியால் சுட்ட பில்லா ஜெகன், தப்பியோடி திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இதனையடுத்து பில்லா ஜெகன் திமுகவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதற்கிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பில்லா ஜெகன் மீண்டும் திமுகவில் ஈடுபாடுடன் கட்சிப்பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்த நாளில் பில்லா ஜெகன், திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போதே அந்த போட்டோக்கள் இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பில்லா ஜெகன் விஜய் கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.