இந்தியக் குடிமகன் அடையாளச்சான்றாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, லைசன்ஸ் என பல சான்றிதழ்கள் உள்ளன. அந்த வரிசையில், இனி பிறப்பு சான்றிதழையும் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
நாளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு சட்டம், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனத்தில் சேர்தல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உட்பட பல்வேறு பணிகளுக்கு நாடு முழுவதும், ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரு ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.