உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பாலராமர் சிலை இன்று அமைக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பேசியிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்புக்கு விழாவுக்கு நாங்கள் எதிரி அல்ல எனவும், ஆனால் மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு, ”இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோயிலை எதிர்த்து சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்” என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-ஷர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.