பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியில் வேட்பாளருக்கு எதிராக களம் இறங்கினார். கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால் 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார். லிங்கராஜ் பாட்டீல் தலைமையிலான கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது.
75 வயதான ஈஸ்வரப்பா, மாநில பாஜக தலைவராக இருந்தவர் மற்றும் கட்சியுடன் நீண்ட அனுபவம் கொண்டவர், பி.எஸ். எடியூரப்பா போன்ற பிற முக்கிய தலைவர்களுடன் மாநிலத்தில் கட்சியை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். பாஜகவிற்க்கு விசுவாசமாக இருப்பதற்காக அறியப்பட்ட ஈஸ்வரப்பா, 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகும் முடிவுக்குக் கட்டுப்பட்டதால், கட்சியின் மத்திய தலைமையால் பாராட்டப்பட்டார்.
இருப்பினும், தனது மகன் மக்களவை தேர்தலில் தனது மகன் காந்தேஷூக்கு சீட் கேட்டு மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது மகனுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான். அவரது குடும்ப கட்டுப்பாட்டில் மாநில பாஜக இருக்கிறது. இதை உடைத்தெறிய வேண்டும் என்று அறிவித்து ஷிவமொக்கா மக்களவை தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக தேர்தலில் களம் காண்பதாலும் அவரை பாஜக தலைமை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.