கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், அதிமுகவையும் மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
முதலவர் ஸ்டாலின் கூறுகையில், “போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னா.. இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுக தோப்புக்கரணம் போடுவாங்க. சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வந்தால் அதிமுகவுக்கு இப்போ உள்ளதும் போய்விடும் ஜாக்கிரதை. தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார் பிரதமர். நம்முடைய இளைஞர்களை பகோடா விற்க சொல்கிறார் பிரதமர் மோடி. ஜி20 மாநாடோ, சந்திரயான் வெற்றியோ பாஜகவின் சாதனை அல்ல. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி, பாஜக.
அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. ஊழல் வழக்கு பயம் காரணமாகவே அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார். அதிமுகவும், பாஜகவும் பகையாய் இருப்பது போல நடித்து, உள்ளுக்குள் நட்பு பாராட்டுகிறார்கள். நீங்க தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பாங்க. மிகப்பெரிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்றப்பட்டு விட்டது. தொகுதி மறுவரையறைக்கு பின் தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம்” என்று கூறினார்