சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதை கண்டித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்றைய தினம் பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் அனுமதியின்றி பேரணி நடைபெற்றது.
இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைப்பதாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், மதுரை ஆடு வியாபாரம் நடக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அங்கு ஆடுகள் நிறைய இருந்த நிலையில், பாஜகவினர் மண்டபத்தில் அடைக்கப்பட்டதும் கூடுதல் ஆடுகளை மீண்டும் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களை வேண்டுமென்றே இந்த மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், தங்களை வேறு மண்டபத்திற்கு மாற்ற வேண்டுமென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.