மக்களவையில், பகுஜன் சமாஜ் எம்.பி., குன்வர் டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்து பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுாரியிடம் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘சந்திரயான் – 3’ வெற்றி குறித்து மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது, தெற்கு டெல்லி தொகுதி உறுப்பினரான, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் பிதுாரிக்கும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, பகுஜன் சமாஜ் எம்.பி., குன்வர் டேனிஷ் அலி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது, டேனிஷ் அலியை பார்த்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பா.ஜ., – எம்.பி., ரமேஷ் பிதுாரி பேசினார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பா.ஜ., – எம்.பி.,யின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பா.ஜ., – எம்.பி.,யின் பேச்சுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக மன்னிப்பு கோரினார். எம்.பி., ரமேஷ் பிதுாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ., – எம்.பி.,யின் பேச்சுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘வரும் நாட்களில் மீண்டும் இது போல நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, எச்சரித்தார்.இதற்கிடையே, லோக்சபா பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி எம்.பி., ரமேஷ் பிதுாரிக்கு பா.ஜ., தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து டேனிஷ் அலி கூறியதாவது: எம்.பி.,க்களை, அவர்களது சமூகத்துடன் தொடர்பு படுத்தி அவமதிப்பதற்காகவா, இந்த கூட்டத் தொடரை ஏற்பாடு செய்தீர்கள்? அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடாளுமன்றத்திற்கு வரும் முடிவை மறு பரிசீலனை செய்ய திட்டமிட்டுஉள்ளேன் என்றார். இதற்கிடையே, காங்., எம்.பி. ராகுல், டேனிஷ் அலியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.