வேட்புமனு தாக்கலின்போது யாகிற முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மற்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முதலில் வந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போதைய எம்.பி.யாக இருக்கக்கூடிய கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்ய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோருடன் வந்திருந்தனர்.
அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய முதலில் திமுகவினரை அழைத்ததால் இருவருக்கிடையும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போதைய அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் டோக்கன் எண் 2 ஆனால் அதிமுகவின் டோக்கன் எண் 7 என்று வாக்குவாதம் நீண்டது.
இறுதியில் அதிமுகவின் வேட்பாளர் ராயபுரம் மனோ முதலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி துரைசாமி வேட்புமனுக்கு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் அமைச்சகர் சேகர்பாபு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார்.
வடசென்னை தொகுதியில் அதிமுக திமுக பாஜக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் பெரும் அளவில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டு கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அதிமுக வாக்குவாதம் காரணத்தால் வேட்புமனு தாக்கல் செய்ய மிக நேரம் காத்திருந்த பாஜகவினர் கதவை உடைத்து உள்ளே செல்ல முற்ப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சேகர்பாபு வெளியில் சென்று காரில் ஏறியபோது, காரை சூழ்ந்து பாஜகவினர் மோடி மோடி என்று கத்தினர். பிறகு அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியே பதற்றத்தில் காணப்பட்டது.