2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் மூன்று கூட்டணிகள் மோதுகிறது. இவை தவிர நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே நேரடி போட்டி தான் இருக்கும் என அரசியல விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் மூத்த அரசியல் விமர்சகரும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி . இது தொடர்பாக பேசிய அவர் பிரதமர் மோடி சாதனைகள் எதையும் புரியவில்லை என தெரிவித்தார். அவர் செய்ததெல்லாம் கேலிக்கூத்தான திட்டங்கள் தான் என குற்றம் சாட்டிய சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 270க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தான் கணிப்பதாகவும் கூறினார் . தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மட்டும்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.