பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் முக்தா திலக் உடல்நலக்குறைவால் காலமானார்.
புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்.எல்.ஏ -வான இவர் பூனே நகர் மேயர் பதவியையும் அலங்கரித்தவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். தற்போது, நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், பெண் எம்.எல்.ஏ ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் சட்டசபையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டசபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.