திமுக அமைச்சரும் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் தான் ஒரு மனதாக, பிராண்டட் பொருட்களுக்கு 5% வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார். ”நாட்டில் வெங்காயம், தாக்காளி விலை குறைந்துவிட்டது. இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா? குடும்பத்தில் ஒரு உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை வாங்க கூட முடியாத நிலையில், ஒரு தாய் இருக்கிறார். தேவைப்படும் மக்களுக்கு மானியத்தில் சிலிண்டர் தருகிறோம். அதனால், பணம் இருப்பவர்கள் தங்களுடைய மானிய உரிமையை விட்டு கொடுங்கள் என்று கூறினீர்கள். உங்களுடைய வாக்குகளை நம்பி பலரும் மானியத்தை விட்டுக்கொடுத்தனர். ஆனால், இன்று பலருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் வந்து சேர வேண்டிய சிலிண்டர் மானியம் கூட முறையாக வந்து சேருவதே இல்லை என்பதுதான் உண்மை. ஒருபுறம் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வருமானத்தை அதிகரிக்க வழியே கிடைப்பதில்லை. உணவு பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்லும் நிலையில், அதைக் குறைக்க எதுவும் செய்யாமல் இருப்பதால், இந்த மக்கள் எப்படி வாழ்வார்கள் என்பதற்கு இந்த அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு மேல் இவ்வளவு கோபமாக ஜிஎஸ்டி போட்டுவிட்டதாக திமுக சொல்கிறது. பிராண்டட் பொருட்கள் மேல் தான் ஜிஎஸ்டி கவுன்சில் வரி போட்டுள்ளது. மத்திய அரசு போடவில்லை. மோடி போடவில்லை. உங்கள் அமைச்சர் அமர்ந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் தான் அது நிர்ணயம் ஆனது. அதில், 5 சதவீதம் தான் பிராண்டட் பொருட்கள் மீது வரி போட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நாளிதழில் செய்தி வந்துள்ளது. ஒரு கிலோ தயிருக்கு பழைய விலை ரூ.100. அதற்கு 5 சதவீத வரி போட்ட பிறகு ரூ.105க்கு விற்க வேண்டும். ஆனால், நீங்கள் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். 5 சதவீத வரி போட சொன்னால், நீங்கள் எவ்வளவு போடுகிறீர்கள். லஸ்சியை பழைய விலைப்படி ரூ.27-க்கு விற்க வேண்டும். 5 சதவீத வரி போட்ட பிறகு ரூ.28.35-க்கு விற்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ.30க்கு விற்பனை செய்கிறீர்கள்.

ஜிஎஸ்டி மீது பழி போட்டுவிட்டு நீங்கள் அதிக விலைக்கு விற்று பாரத்தை மக்கள் மீது சுமத்துகிறீர்கள். ரூ.10க்கு விற்ற மோர், 5 சதவீத வரி போட்டால் ரூ.10.50 ஆக விற்க வேண்டும். ஆனால், ரூ.12க்கு விற்கிறீர்கள். இது எப்படி நியாயம். ஜிஎஸ்டி கவுன்சில் மீது பழி சுமத்துகிறீர்கள். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் மத்திய அரசு என்கிறீர்கள். மத்திய அரசு இல்லை. அதே ஜிஎஸ்டி கவுன்சிலில் உங்கள் அமைச்சரும் அமர்ந்துள்ளார். ஏக மனதாக அனைவரும் சேர்ந்து ஒருமித்தமாக எடுத்த முடிவுதான் இது. புதிதாக ஏழைகளுக்கு கஷ்டம் கொடுக்க எதுவும் இல்லை. ஒவ்வொரு பிராண்டட் பொருட்கள் மேல் 5 சதவீத வரி விதிக்க சொன்னால், அதற்கு மேல் மேல் வரி விதித்து விட்டு ஜிஎஸ்டி கவுன்சில் மீது பழி போடுகிறீர்கள். இது தவறு. குறிப்பாக தமிழகமும். தமிழகத்திற்கு ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தான் பாக்கி உள்ளது. அதுவும் ரூ.2,493 கோடி தான். அதை விட ஜாஸ்தி இல்லை. எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும்”. இவ்வாறு அவர் கூறினார்.