சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே நரசிம்ம செட்டிரோடு பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவரின் சடலம் முற்புதருக்குள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னதானப்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தோராஜ் அன்சாரி (41) என்ற வடமாநில தொழிலாளர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகளவில் மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பருப்பு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உயிரிழந்த வடமாநில தொழிலாளர் அருகே இருந்த அவருடைய செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.