கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்தாண்டு திருமணமான நிலையில், சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், சிந்துவுக்கும் கேரளாவைச் சேர்ந்த சமித் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித் நான், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாக சிந்துவிடம் தெரிவித்துள்ளார். கணவன் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து, தனது கள்ளக்காதலனை சந்திக்கும் ஆர்வத்தில் யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்து வேடசந்தூரில் சமித்தை தேடி உள்ளார். அவர் எங்கும் கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.
அந்தப் பெண்ணின் உதவியுடன் வேடசந்தூர் அண்ணா நகரில் இருந்து நூர்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டே காதலன் சமித் பற்றி விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. மேலும், அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வருவதும் நூற்பாலை மேலாளர் இல்லை என்பதும் கொத்தனார் வேலை செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பொய் சொல்லி வந்ததும் சிந்துவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சிந்து, தனது ஊருக்கு செல்ல முடியாமல் வேதனையுடன் 3 மாதங்களாக வேடசந்தூரிலேயே தங்கியிருந்துள்ளார். இதற்கிடையே, சிந்து காணாமல் போனதை அறிந்த அவரது கணவர், வெளிநாட்டில் இருந்தவாரே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய கேரளா பெண் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகி பழகி, சிந்து வேடசந்தூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வேடசந்தூர் வந்த கேரளா போலீசார் வேடசந்தூர் போலீசாரின் உதவியை நாடினர். அதைத்தொடர்ந்து வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி தனிப்படையினர் மற்றும் கேரளா போலீசார் இணைந்து சிந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்ற பொழுது அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு சிந்துவை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.