ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியான இன்று வரை ஆண்டின் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்த 2024ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான நினைவலைகள் இருக்கலாம்.. அது மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ எப்படி வேண்டுமானாலும் அமைந்திருந்தாலும் சில நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது..
சமூகம், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல துறைகளில் பல மாற்றங்கள் இந்தாண்டில் நிகழ்ந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் கோடிக்கணக்கான நினைவுகளையும் நிகழ்வுகளையும் தன்னகத்தே புதைத்துக் கொண்டு 2024 ஆம் ஆண்டு விடைபெறும் நிலையில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
உலகிலேயே முதலாவதாக மத்திய பசுபிக் தீவு நாடான கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்தது. மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் புத்தாண்டு பிறந்தது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்தபடி உற்சாகமாக கொண்டாடினர். நியூசிலாந்தை தொடர்ந்து அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், இலங்கையை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொதுமக்கள் ஒருவருக்கொருவார் வாழ்த்து தெரிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. புத்தாண்டையொட்டி கோயில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். அனைவருக்கும் 1Newsnation சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
Read more ; Yearender : இன்றுடன் விடைபெறும் 2024.. நாட்டை உலுக்கிய கோர சம்பவங்கள் ஒரு பார்வை..!!