நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நிதியுதவி பெற விவசாயிகளுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது விவசாயிகள் குடும்பங்கள் இதில் பயன்பெற முடியும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கியது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளது.
ஆனால், விண்ணப்பிக்கும் தகுதி கணவன் அல்லது மனைவியாகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. இருவருமே இந்த திட்டத்தில் விண்ணப்பித்து ஒவ்வொருவரும் 6000 ரூபாய் நிதி உதவி பெற முடியாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிதி உதவி கிடைக்கும். ஆனால், சில குடும்பங்களில் கணவன் இல்லாமல் மனைவி குடும்ப தலைவியாக இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தில் அவர் நிதி உதவி பெற முடியும். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு சில விவரங்களுடன் வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டு முக்கியம். ஆதார் கார்டு இணைப்பு இல்லாவிட்டால் பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.