நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 15-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அடுத்த தவணை பணம் பெற விரும்பும் அனைத்து விவசாயிகளும் கேஒய்சி முடித்திருப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை செய்யவில்லை என்றால் அடுத்த தவணைக்கான பணம் உங்களுக்கு கிடைக்காது. எனவே, விவசாயிகள் பிஎம் கிசான் மொபைல் செயலியில் உள்ள முக அங்கீகார அம்சம் மூலம் தொலைதூரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தற்போது வீட்டில் அமர்ந்து கொண்டே ஓடிபி அல்லது கைரேகை இல்லாமல் தங்கள் முக அங்கீகாரத்தை பெறலாம்.
மேலும், 15-வது தவணைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்யலாம். இது தவிர அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற வெப்சைட்டை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.