சக் தே இந்தியா, ஹாப்பி நியூ இயர், தில் சாஹ்தா ஹை போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா இன்று காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்தத் திரைத் துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இவர் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ தொடரான “மேட் இன் ஹெவன் சீசன் 2” இல் மிருணால் தாக்கூரின் தந்தையாக நடித்திருந்தார், இதில் ரியோ கபாடியா நடிப்பில் கவர்ந்தார். இவர் மிகப் பெரிய பாலிவுட் படங்களில் பல மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷாருக்கானின் “சக் தே இந்தியா” படத்தில் வர்ணனையாளராக அற்புதமாக நடித்து மக்களை கவர்ந்தவர்.
இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல, சப்னே சுஹானே லடக்பன் கே, குடும்ப், ஜுத்வா ராஜா, கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில், அவர் மகாபாரதம் தொடரில் கந்தர் மன்னராக நடித்தார், மேலும் அவர் வலிமைமிக்க மன்னரின் பாத்திரத்திற்காக பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா இன்று மதியம் 12.30 மணிக்கு காலமானர். இவருக்கு வயது 66. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு மரியா என்ற மனைவியும் ஃபரா என்ற மகளும் உள்ளனர். கபாடியாவின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 15, வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.