ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஃபுமியோ கிஷிடா வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்திற்குச் சென்றார்.. அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி மர்ம பொருள் ஒன்று விழுந்தது.. எனினும் அது சற்று முன்னரே விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது.. இதில் பிரதமர் கிஷிடா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை மீட்டு காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து சந்தேக நபர் என்று நம்பப்படும் ஒரு நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.. எனினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
உலகின் முன்னணி தலைவர் பங்கேற்ற நிகழ்வில் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அச்சுறுத்தும் விதமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
முன்னாள் ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபே 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழல் ஜப்பான் பிரதமர் குறிவைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.