குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீதேவி, 13-வது வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா என பல ஹிட் படங்களில் நடித்தார். தமிழில் நடித்து கொண்டிருக்கும் போதே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக மாறிய பாலிவுட்டிற்கு சென்றார். ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக மாறினார் ஸ்ரீதேவி.
1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்பி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருமே இப்போது நடிகைகளாக உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி துபாயில் ஸ்ரீதேவி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எனினும் ஸ்ரீதேவியின் இறப்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரின் கணவர் போனி கபூர் மனம் திறந்து பேசி உள்ளார். ஸ்ரீ தேவி இறப்பை சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு பங்களித்த அவரது வாழ்க்கை முறையின் சில அம்சங்களை குறித்து அவர் பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய போனி கபூர் ஸ்ரீதேவி எப்போதுமே தனது தோற்றத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்ததாகத் தெரிவித்தார். மேலும் “ ஸ்ரீதேவி எப்போது தான் திரையில் அழகாக தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தா. இதனால் அவர் அடிக்கடி தீவிர நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது. உதாரணமாக ஸ்ரீதேவி அடிக்கடி க்ராஷ் டயட் செய்தார். சில சமயங்களில் அவர் விரும்பிய தோற்றத்தை அடைய எதுவுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்தார். அழகை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த இந்த உறுதி சில சமயங்களில் அவரின் உடல்நிலையை பாதித்தது.” என்று தெரிவித்தார்.
உணவுக் கட்டுப்பாடு காரணமாக ஸ்ரீதேவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் போனி கூறியுள்ளார். ” ஸ்ரீதேவி என்னைத் திருமணம் செய்த காலத்திலிருந்தே, ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை இருந்தது. அவரின் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளால் அவரின் உடல்நலப் போராட்டங்கள் அதிகரித்தன. உப்பு சேர்க்காமல் அடிக்கடி சாப்பிடுவார். ஹோட்டலில் சாப்பிடும் போது உப்பு இல்லாத உணவை கேட்டு சாப்பிடுவார்.
ஸ்ரீதேவியின் மரணத்திற்குப் பிறகு இரங்கல் தெரிவிக்க நடிகர் நாகார்ஜுனா எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது படப்பிடிப்பு ஒன்றில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்த சம்பவத்தை அவர் என்னிடம் நினைவுகூர்ந்தார். அந்த நேரத்தில் அவர் மீண்டும் க்ராஷ் டயட்டில் இருந்தார். அவரின் இந்த கடுமையான டயட், அவரது ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.