மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 3 தவணைகளில் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், இந்த தொகையை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் சேர்த்து இந்த தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 மாநில தேர்தலுக்கு முன், பிரதமர் மோடியே இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. இந்த நற்செய்தியை தேர்தலின் போது விவசாயிகளுக்கு கொண்டு செல்ல பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால் மேலும் 20 ஆயிரம் கோடி நிதிச்சுமை மத்திய அரசுக்கு வர வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டில் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மத்திய அரசு 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.