மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உள்ளது. பெண்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் பணியாளர்களுக்கு சில மாதங்கள் மட்டும் விடுப்பு அளிக்கின்றன. இந்த நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது தனக்கு விடுமுறை வழங்கவில்லை என தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, ”மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம். மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.