சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள், காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வந்த், பள்ளி விடுமுறையொட்டி, ஆலந்தூரில் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, ஹஸ்கி ரக வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில், அஸ்வந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அஸ்வந்தின் அத்தை, மாமா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் நாயிடமிருந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சிறுவனை கடித்த நாய் சைபீரியன் ஹஸ்கி வகையைச் சேர்ந்தது என்றும், அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய வேறு ஒரு காவலர் அந்த நாயினை வளர்ப்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் உறவினர் புனித தோமையர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இரு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி காயமடைந்தது. இதனையடுத்து பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய சுற்றறிக்கை அனுப்பியது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும்.. வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.