150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், சிறுவனை மீட்க முடியாததால், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். சிறுவனை மீட்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. முன்னதாக ,150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிப்பதற்கு வசதியாக ஆக்சிஜனை குழாய் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சிறுவனின் நிலையை கண்காணிக்க சிசிடிவி கேமரா உள்ளே பொருத்தப்பட்டது.
இந்நிலையில், கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின், நேற்றிரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டனர். மயக்க நிலையில் இருந்த சிறுவன், ஆம்புலன்ஸ் மூலம் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட நிலையில், மோட்டார் சிக்கியதால் மூடப்படாமல் அப்படியே கிடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
Read More : குலதெய்வ வழிபாடு செய்ய இந்த நாள் சிறப்பானதாம்..!! மாதந்தோறும் இதை மட்டும் மறந்துறாதீங்க..!!