பெங்களூருவில் உடலுறவின்போது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த 67 வயது கள்ளக்காதலனின் உடலை கணவனின் உதவியுடன் சாலையில் வீசிய 35 வயது பெண் போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.
நவம்பர் 17ஆம் தேதி ரோஸ் கார்டன் பகுதியில் ஜே.பி நகரில் சாலையோரத்தில் 67 வயதுடைய ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ்மேனின் சடலம் கிடந்தது. அந்த நபரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய சட்டப்பிரிவு 174சி-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய புத்தேனஹள்ளி போலீசாருக்கு, தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் 35 வயது பெண், அவரது கணவர் மற்றும் சகோதரர் சிக்கியது எப்படி?
சாலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 67 வயது நபருக்கு ஆகஸ்ட் 2022ஆம் தேதி ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும், அவருக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி மாலை வீட்டைவிட்டு வெளியே வந்த நபர், மாலை 4.55 மணியளவில் தனது மருமகளை அழைத்து, இரவு 7 மணிக்குள் வீட்டிற்கு திரும்பி விடுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சொன்னபடி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, சுப்ரமணியபுரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 17ஆம் தேதி காலை 8 மணியளவில் காணாமல்போன நபரின் சடலத்தை கண்டுபிடித்த போலீசார் அவருடைய உறவினரைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். யாரோ பிணத்தை ரோஸ் கார்டன் பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக சந்தேகித்து, போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்ததில் நவம்பர் 16ஆம் தேதி சரக்கி பகுதியிலுள்ள ஒரு பெண்ணிடம் அவர் பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
‘அந்த நபரை கடந்த சில நாட்களாக எனக்கு தெரியும். அவர் சிலமுறை எங்களுடைய வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணியளவில் என்னுடைய வீட்டுக்கு வந்தார். படுக்கையறையில் ஒன்றாக இருந்தபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே நான் சாவியை எடுத்து அவர் கையில் கொடுத்து, கால்களை தேய்த்துவிட்டேன். ஆனாலும், அவர் இறந்துவிட்டார்’ என்று கூறினார். தொடர்ந்து, தங்களுடைய உறவு குறித்து வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் போலீசாருக்கோ அல்லது அவருடைய உறவினருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் தனது கணவர் மற்றும் சகோதரரின் உதவியுடன், உடலை இரண்டு சாக்குப்பைகளில் சேர்த்துக்கட்டி, டவல் மற்றும் போர்வையால் மூடி, இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச்சென்று ரோஸ் கார்டன் பகுதியில் போட்டுவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
அடையாளங்களை அழித்த குற்றத்திற்காக 3 பேர் மீதும் முதலில் வழக்குத் தொடர்ந்த போலீசார் பின்னர், இந்திய சட்டப்பிரிவுகள் 176 (சட்டப்பூர்வமான அரசு ஊழியருக்கு தகவல் வழங்க தவறியமை), 201 (குற்றச்சான்றுகளை அழித்தல் அல்லது குற்றவாளிக்கு தவறான தகவல்களை வழங்குதல்), 202(தகவல் வழங்காமல் வேண்டுமென்றே புறக்கணித்தல்) மற்றும் 34 (பொது நோக்கத்திற்காக செய்யப்பட்ட தவறான செயல்கள்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அந்த நபர் இறந்ததற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை தகவல்களுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே இந்த வழக்கில் முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.