தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பாக செயல்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநிலத்திட்ட இயக்குனர் இளம் பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. தற்போது 3,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படித்து வரும் 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதையும், ஊட்டச்சத்து குறைபாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை உணவு திட்ட பணிகளில் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமயம் மேற்பார்வையாளர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டார வளமயம் அளவில் ஓர் ஆசிரியர் பயிற்சி வரை முதல்வரின் காலை உணவு திட்டப்பணியை கண்காணிக்க பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.