தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 செ.மீ., கடம்பூரில், ராஜபாளையத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும். வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.