இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த 29ஆம் தேதி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடி பயனாளிகள் உள்ளனர். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தற்போது மேலும் ரூ.200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறையும் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு 200 ரூபாய் குறைத்துள்ளதால், தற்போது ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, நிதி நிலைக்கேற்ப தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்படி அந்த 100 ரூபாயும் குறைந்தால், மக்களுக்கு ரூ.818 என்ற விலையில் சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.