டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ, மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து இருந்தது.
இந்த சூழலில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.. நேற்று அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.. டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு செல்லவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.. இந்நிலையில் மணிஷ் சிசோடியா டெல்லி துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.. இதே போல் மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.. இருவரின் ராஜினாமா கடிதங்களையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்..
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், 10 மாதங்களாக சிறையில் உள்ளார். மணிஷ் சிசோடியா 18 அமைச்சகங்களுக்கு பொறுப்பேற்றுள்ளார். டெல்லி அமைச்சரவையில், முதல்வர் கெஜ்ரிவால் உட்பட, 5 அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.