அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்தார். அதில், இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்தது. இதையடுத்து, அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, ”அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு பேரிழப்பு ஏற்படும்” என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.