தொகுதி மேம்பாட்டு நிதியில் 18% ஜிஎஸ்டி வரியை இனி தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பேசினார். அப்போது, சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கூடுதலாக வழங்க வேண்டும். தற்போதைய நிதியை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. மேலும், அதில் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருப்பதால், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. இந்நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் 18% ஜிஎஸ்டி வரியை இனி தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். 18% ஜிஎஸ்டி வரியும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே செலுத்தப்பட்ட நிலையில், இனி அதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.