கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி நேற்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதி வலுபெறக்கூடும். பிறகு 25ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கும், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.