ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.
இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார், அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரே(17.5) கில்லும் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலியுடன் ( 16 பந்துகளில் 8 ரன்கள்) அட்டமிழக்காமல் ஆடி வருகிறார் கே.எல்.ராகுல் ( 28 பந்துகளில் 17 ரன்கள்). இப்படி போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 24.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டுள்ளதால் ரிசர்வ் நாளான நாளைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று எந்த ஓவரில் ஆட்டம் தடைப்பட்டதோ அந்த ஓவரில் இருந்தே நாளை 3 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.