எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன் ஒரு அரசியல்வாதி ஆவார். ஆரம்பகால திராவிடத் தலைவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். எம்ஜிஆர் கழகம் கட்சியின் நிறுவனர். இவர், 1977 முதல் 1996 வரை ஐந்து அரசாங்கங்களில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
மேலும், சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், அதிமுகவின் சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தார். அதிமுக அமைப்பை உருவாக்கி, எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து, கட்சியை உருவாக்கினார். 70 மற்றும் 80-களில் அதிமுக அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். கருணாநிதி மற்றும் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாக இருந்த இவர், அதிமுகவின் சகுனி என வர்ணிக்கப்பட்டவர்.