பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது. 2019 பிப்ரவரி 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த மிகப்பெரிய குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது.
பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி துன்புறுத்திய வழக்கில் திருநாவுக்கரசு என்பவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்த 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது. திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.