வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. 0.25% குறைக்கப்பட்டதால், ரெப்போ வட்டி விகிதம் 6%ஆக உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, “உலகளாவிய வர்த்தகப் போரினால் உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலை, உள்நாட்டு வளர்ச்சியையும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். அதிக சுங்க வரி விதிப்பு இந்தியாவின் நிகர ஏற்றுமதியில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் வர்த்தகப் போரினால் ஏற்படும் பாதிப்புகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இது, இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கலாம் என்று சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.