இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இதற்காக மாணவர்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ இடங்களை அதிக அளவில் கைப்பற்றுவது நீட் ரிப்பீட்டர்களே. இவற்றில் பெரும்பாலான நீட் ரிப்பீட்டர்கள் தனியார் பயிற்சி மையங்களில் கணிசமாக செலவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர்
ஆனால், அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது. இதனையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 2018- 2019ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை நீட் இலவசப் பயிற்சியைத் தொடங்கப்பட்டது.
அந்தவகையில், இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம்பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.