இன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவையில் இருந்து வெளியேறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், பேரவையில் இருந்து அவர் வெளியேறினார்.
இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரையை வாசிப்பதற்காக ஆளுநர் ரவி எழுந்தார். நான் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும், தேசிய கீதத்துடன் அவை தொடங்காதது ஏன்? தேசிய கீதம் இல்லாமல் சட்டப்பேரவையை தொடங்கி இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. அத்துடன் ஆளுநர் உரையாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பல பொய்யானவை.
உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளதால், நான் உரையை படிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு ஆளுநர் உரையை படிக்காமல் அமர்ந்தார். பின்னர், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இருந்து ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.