கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை…
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.