பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேர்ரி ஜான்ஸன், ஓரிரு வாரத்தில் தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்ந்துவிடுவார் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியான கேரி சைமண்ட்ஸுன், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2020-ம் ஆண்டு வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் 2021-ம் ஆண்டு இவர்களுக்கு ரோமி என்ற பெண் குழந்தை பிறந்தது.
58 வயது நிரம்பிய போரிஸ் ஜான்சன், ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கேரி சைமண்ட்ஸுன் உடனானது அவருக்கு மூன்றாவது திருமணம். இந்த நிலையில் கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் கையில் பிடித்தபடி, ஒரு புகைப்படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார். கடந்த எட்டு மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். மீண்டும் அண்ணன் ஆகப்போவதில் வில்ஃப் குஷியாக உள்ளார். ரோமியும் அடுத்து என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதில் ஆர்வமாக உள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கும் அவரது முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். பிறகு அவரது காதலி ஹெலனுக்கு ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் போரிஸ் ஜான்ஸன் – கெர்ரி தம்பதிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, அவரது எட்டாவது குழந்தையாகும். சமீபத்தில் போரிஸ் ஜான்ஸன், 9 படுக்கையறைகள் கொண்ட கடற்கரையோர பங்களாவை வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், எட்டாவது குழந்தை பிறக்கப்போவதாக போரிஸ் ஜான்ஸன் – கெர்ரி தம்பதிகள் அறிவித்துள்ளனர்.