இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022ஆம் ஆண்டில் உயிரிழந்ததை அடுத்து மன்னராக மகன் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றார். அண்மையில் அவருக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புரோஸ்டேட் சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மன்னர் சார்லஸ் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். விரைவில் பொது வாழ்வுக்கு திரும்புவார் என்று அரண்மனை கூறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பிரிந்து வாழும் மகன் ஹேரி, மன்னர் சார்லஸின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக விரைவில் லண்டன் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 75 வயதான மூன்றாம் சார்லஸ் விரைந்து குணமடைய வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.