தங்கை தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்கு நடுவே தங்கையை தோளில் சுமந்து அண்ணன்கள் கரை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கஜபதி நகரம் மண்டல் அருகே உள்ள மாரிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கிராமத்தை சூழ்ந்தது. மேலும், கிராமத்தை ஒட்டி ஓடும் சம்பாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், கிராமத்துக்கு வரும் பேருந்து சேவைகளும் தடைப்பட்டது. இந்நிலையில் தான், கலாவதிக்கு தான் பணியாற்றும் நிறுவனத்தில் ப்ரோமோஷனுக்கான தகுதித்தேர்வு சனிக்கிழமை நடந்தது. இந்த தேர்வு விசாகப்பட்டினத்தில் நடந்தது.
இதில் பங்கேற்க கலாவதி செல்ல வேண்டும். ஆனால், கிராமத்தை சூழ்ந்த வெள்ளம், சபர்மதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் அவர் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தது. இதுபற்றி அவர் தனது அண்ணன்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி அண்ணன்கள் இருவரும் சேர்ந்து தங்கை கலாவதியை தோளில் சுமந்து சம்பாவதி ஆற்றில் வேகமாக ஓடும் கழுத்தளவு தண்ணீரை போராடி கடந்தனர். ஆற்றின் மறுபுறம் சென்ற பிறகு கலாவதி உடையை மாற்றிக் கொண்டு பஸ் ஏறி விசாகப்பட்டினம் சென்றார்.
தற்போது தங்கை தேர்வெழுத அவரை தோளில் சுமந்து சம்பாவதி ஆற்றை கடக்க இரு அண்ணன்கள் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.