அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது மற்றும் கடந்த ஆறு மாதங்களில் 55 லட்சம் பயனர்களைச் சேர்த்துள்ளது என மாநிலங்களவையில் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது பதிலளித்த அமைச்சர், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தை மீண்டும் லாபத்திற்கு கொண்டு வரவும், அதன் வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறினார்.18 ஆண்டுகளில் முதல் முறையாக BSNL அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. 2023-24 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், ரூ.1,262 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு அதே காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில், நிறுவனம் ரூ.1,500 கோடி செயல்பாட்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் முதல் பிஎஸ்என்எல் 55 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. ஜூன் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை, பிஎஸ்என்எல் அதன் வரலாற்றில் முதல் முறையாக 8.55 கோடி வாடிக்கையாளர்களில் இருந்து 9.1 கோடி வாடிக்கையாளர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் 55 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளோம் என்றார்.
5G சேவை உலகிலேயே மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், கடந்த ஒரு வருடத்தில் 99 சதவீத மாவட்டங்களிலும் 82 சதவீத மக்கள்தொகையிலும் சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதர தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு, பிஎஸ்என்எல்-ந் குறைந்த அளவில் ரீச்சார்ஜ் திட்டம் போன்ற நடவடிக்கைகளால் கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL-யில் இணைந்துள்ளனர்.